திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தகடுகள் பொருத்தும் பணி தள்ளிவைப்பு...!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தகடுகள் பொருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை,
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வரும் பிப்ரவரி மாதம் முதல் திருமலையில் உள்ள விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி தொடங்க இருந்தது. இதனிடையே திருப்பதி கோவிந்தராஜர் கோவில் கோபுரத்துக்கு தங்க தகடுகள் தயாரிக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக உள்ளூர் ஒப்பந்ததாரர் மூலமாக நடைபெற்று வந்தது. இந்தப் பணி தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
இதேபோன்று திருமலையில் ஏழுமலையான் கோவில் விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணியும் தாமதமாகக் கூடாது என்பதால், அதற்கு சர்வதேச அளவில் விரைவில் ஒப்பந்தம் கோரப்படும். எனவே திருமலை ஏழுமலையான் கோவில் விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்பா ரெட்டி தெரிவித்தார்.