கிராம மக்களின் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
கயத்தாறு அருகே வருகிற 17-ந் தேதி கிராம மக்கள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வருகிற 17-ந் தேதி கிராம மக்கள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சமுதாய நலக்கூடம்
கயத்தாறு தாலுகா கரடிகுளம் கிராமம் சி.ஆர்.காலனியில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடனடியாக ரூ.1¼ கோடி ஒதுக்கீடு செய்து பணி தொடங்க இருந்த நிலையில் அருகில் சின்னக்காலனியில் வாழும் மக்கள் தங்களுக்கும் சமுதாய நலக்கூடம் வேண்டும் என்று பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதுடன், சின்னக்காலனி பகுதிக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது.
இந்த கட்டுமான பணியை மாற்றக்கூடாது என்று சி.ஆர்.காலனி மக்கள் வருகிற 17-ந் தேதி சாலை மறியல் மற்றும் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கயத்தாறு தாசில்தார் நாகராஜன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் மறு உத்தரவு வரும்வரை சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகள் நடைபெறக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் வருகிற 17-ந் தேதி நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராமச்சந்திரன், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் ஊர் மக்கள் கணேசன், கார்த்திக், மகாலிங்கம், தங்கதுரை, கலந்து கொண்டனர்.