திண்டுக்கல்லில் காங்கிரசார் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு
திண்டுக்கல்லில் காங்கிரசார் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி் கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அதை பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சி, 6 பேரின் விடுதலையை ஏற்காமல் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும் 6 பேரையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தியின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில் "உங்கள் கொலையாளிகளின் விடுதலை இதயமே வலிக்கின்றது, மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்..." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் ஒட்டப்பட்டு உள்ள அந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.