தென்காசி வழியாக நெல்லையில் இருந்து மைசூருக்கு ரெயில் இயக்க வாய்ப்பு
நெல்லையில் இருந்து தென்காசி வழியாக மைசூருக்கு ரெயில் இயக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகள் கிடைத்திருப்பதால் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
நெல்லையில் இருந்து தென்காசி வழியாக மைசூருக்கு ரெயில் இயக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகள் கிடைத்திருப்பதால் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
புதிய பெட்டிகள் மாற்றம்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி இருமார்க்கத்திலும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதே போல் மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் இதுவரை பழைய ஐ.சி.எப் பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு நிற எல்.எச்.பி பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டது.
இதையொட்டி இந்த 4 ரெயில்களின் ரெயில் பெட்டிகள் தற்போது உபரியாக கிடைத்து உள்ளது. அதாவது மொத்தம் 92 பெட்டிகள் கிடைத்துள்ளது.
நெல்லை -மைசூரு
இந்த கூடுதல் பெட்டிகளை கொண்டு மைசூரில் இருந்து பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை வழியாக நெல்லைக்கு புதிய ரெயில் இயக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அதிகாரிகள் பரிசீலனை செய்து உள்ளனர். மேலும் ரெயில் ஆர்வலர்கள், பயணிகள், அரசியல் பிரமுகர்களும் இதற்கான கோரிக்கையை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.
பயணிகள் வலியுறுத்தல்
இதுகுறித்து தென் மாவட்ட ெரயில் பயணிகள் கூறுகையில், மதுரை ெரயில்வே கோட்டத்தில் மிக முக்கிய வழித்தடமான விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழித்தடத்தில் 3 மாவட்டங்கள் பயன்பெறும் மிக முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பெங்களூருக்கு ரெயில்கள் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மைசூர் - தூத்துக்குடி, மயிலாடுதுறை ெரயில்களில் ஓடிய பழைய ரெயில் பெட்டிகளை பயன்படுத்தி உடனடியாக தென்காசி வழியாக மைசூர் - நெல்லை ரெயிலை இயக்க வேண்டும். இதன் மூலம் தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு நேரடி ரெயில் சேவை கிடைக்கும்'' என்றனர்.