காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம்
ராஜீவ் காந்தி கொலையாளியை விடுதலை செய்த நிலையில் தங்களது மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் வாயில் வெள்ளை துணியை கட்டி காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
ராஜீவ் காந்தி கொலையாளியை விடுதலை செய்த நிலையில் தங்களது மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் வாயில் வெள்ளை துணியை கட்டி காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் செய்தனர்.
விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறி வாளனை விடுதலை செய்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தங்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மாநில தலைமை அறிவித்தபடி அரண்மனை பகுதியில் வாயில் வெள்ளை துணியை கட்டி அறவழி போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டணை அனுபவித்து வந்த பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். உச்ச நீதி மன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இருப்பினும் இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டர் களுக்கும் ஏமாற்றத்தையும், வேதனையையும் தந்துள்ளது. இது எங்களுக்கு சோகமான ஒரு நாள். இந்தியாவின் ஒருமைப் பாடு, இறையாண்மை மீது நம்பிக்கை வைத்துள்ள, பயங்கர வாத செயல்களுக்கு எதிராக போராடுவதில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் வருத்தத்தை அளிக் கிறது. ஒரு பயங்கரவாதியை, பயங்கரவாதியாகவே கருத வேண்டும். அப்படித்தான் நடத்த வேண்டும்.
வேதனை
ஆனால் ஒரு முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கொலையாளி விடுவிக்கப்பட்டது மிகுந்த வலியையும், வேதனையையும் தருகிறது. இது கண்டிக்கத்தக்கது. துரதிஷ்டமானது. தவறான முன் உதாரணத்திற்கு வழி வகுத்துவிடும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது. ராஜீவ் காந்தி நாட்டிற்காக தன் உயிரையே தியாகம் செய்துள்ளார். மலிவான அரசியல் காரணங்களுக்காக அவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளியை விடுவிக்கும் சூழ்நிலையை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. அப்படி பார்த்தால் எத்தனையோ தமிழர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்கள்.
அறப்போராட்டம்
அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை. எனவே எங்களது மன உணர்வை வெளிப் படுத்தும் வகையில் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடத்தி உள்ளோம். இவ்வாறு கூறினார். இந்த போராட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவர் வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் கோபால், மாவட்ட துணைதலைவர்கள் காவனூர் கருப்பையா, துல்கீப் கான், பொதுச்செயலாளர் மணிகண்டன், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம், இலக்கிய அணி முருகேசன், முன்னாள் ராணுவத்தினர் அணி மாவட்ட தலைவர் கோபால் உள்ளிட்ட காங்கிரஸ் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரசார் அனைவரும் தங்களது வாயில் வெள்ளை துணியை கட்டி தங்களது மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.