பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்
பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம் நடந்து வருகிறது.
கரூர் செம்படாபாளையம் கிராமத்தில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில் நீர்வளத்துறையின் சார்பில் நேற்று ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணியினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களின் அனைத்து பாசன வாய்க்கால்களையும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகள் 2023-24 திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 147.33 கி.மீ. அளவிற்கான பாசன வாய்க்கால்களை ரூ.6 கோடியே 48 லட்சம் செலவிலான 38 பணிகள் எடுக்கப்பட்டு இந்த தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பாகவோ, மே 31-க்கு முன்னதாகவே பணிகளை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெறுகின்றன. இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் கரூர் மாவட்டத்தில் மட்டும் புகளூர் வாய்க்கால், நெரூர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் போன்ற வாய்க்கால் மூலம் 11,000-க்கு மேற்பட்ட ஏக்கர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்கள் பயன்பெற உள்ளன. மேலும், உழவர் நலக்குழு மூலமாக ஒவ்வொரு பணிக்கும் 5 அதிகாரிகள் வேளாண்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அந்த இடத்தை சேர்ந்த வேளாண் மக்களையும் சேர்த்து உழவர் குழு மூலமாகவும் சரியாக பணிகள் நடைபெறுவதையும், பணிகளை தரமாக நடைபெறுகிறதா? என்பது குறித்தும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக பாசன வாய்க்கால் மீண்டும் பொலிவு பெற்று அந்த பாசன நிலங்கள் சரியான காலத்தில் பாசன வசதிகளை விவசாயிகள் பெறுவார்கள், என்றார்.