ஏழை காத்தம்மன் கோவில் விழா
ஏமேலூர் அருகே ஏழு சிறுமிகளை தெய்வங்களாக தேர்வு செய்து வழிபடும் பாரம்பரிய ஏழைகாத்தம்மன் கோவில் விழா நடைபெற்றது.
மேலூர்
மேலூர் அருகே ஏழு சிறுமிகளை தெய்வங்களாக தேர்வு செய்து வழிபடும் பாரம்பரிய ஏழைகாத்தம்மன் கோவில் விழா நடைபெற்றது.
வெள்ளலூர் நாடு
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை தலைமையிடமாக கொண்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளலூர்நாடு என பலநூறு ஆண்டுகளாக இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிக்காரர்சுவாமியும், ஏழைகாத்த அம்மனும் காவல் தெய்வங்களாக இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா இங்கு பிரசித்தி பெற்றதாகும்.
விழாவை முன்னிட்டு வழக்கம் போல் அம்மன் தெய்வங்களாக 7 சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்பகுதி மக்கள் பழமையான கட்டுப்பாடுகளுடன் 15 நாட்கள் விரதம் இருந்தனர். விரதம் இருந்த பக்தர்கள் நேற்று வெள்ளலூரில் ஒன்று கூடினர். பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் 7 சிறுமிகளும் அம்மன் தெய்வங்களாக பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி ஊர்வலத்தில் வந்தனர். இதைதொடர்ந்து பெரிய சேமக்குதிரை வாகனங்களை பக்தர்கள் சுமந்து ஊர்வலத்தில் வந்தனர்.
பக்தர்கள்
ஆண் பக்தர்கள் வைக்கோலை கயிறு போல திரித்து உடல் முழுக்க இறுக்மாக சுற்றிக்கொண்டும். பல விதமான உருவங்களில் முகமூடிகளை அணிந்து வெள்ளலூரில் தொடங்கி ஏழைகாத்தம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். பெண்களில் திருமணம் ஆகாதவர்கள் சிறிய மண் பொம்மைகளையும், திருமணமான பெண் பக்தர்கள் தென்னம்பாலை எனப்படும் தென்னை மரகுறுத்து மீது பூக்கள் சுற்றி மண் கலயங்களையும் ஊர்வலத்தில் சுமந்து வந்தனர்.
வெள்ளலூரில் தொடங்கி கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி விலக்கு வழியாக ஏழைகாத்தம்மன் கோவிலுக்கு நடந்து சென்று அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் வெள்ளலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பேர் கலந்துகொண்டனர். மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,