புதிய கலெக்டராக பூங்கொடி பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பூங்கொடி பதவி ஏற்றார்.
புதிய கலெக்டர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த விசாகன், தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். இதையடுத்து சேலம் ஜவ்வரிசி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.என். பூங்கொடி திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். அதன்படி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எம்.என்.பூங்கொடி நேற்று பதவி ஏற்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே வாசுகி, அமுதா, விஜயலட்சுமி என 3 பெண்கள் கலெக்டராக இருந்துள்ளனர். இதில் வாசுகி 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையும், அமுதா 1.10.2007 முதல் 05.11.2007 வரையும், விஜயலட்சுமி 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையும் கலெக்டராக பணியாற்றியுள்ளனர். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தின் 4-வது பெண் கலெக்டராக எம்.என்.பூங்கொடி பொறுப்பேற்றுள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
அதேநேரம் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய கலெக்டர்கள் பட்டியல்படி எம்.என்.பூங்கொடி 28-வது கலெக்டராக பதவி ஏற்றுள்ளார். பதவி ஏற்றதும் அவர், முதல் நிகழ்வாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அனைத்து துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதாவது, மாவட்ட அளவிலான அலுவலர்கள் முதல்-அமைச்சர் அலுவலக தனிப்பிரிவின் மூலம் தங்களிடம் வரும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் பதில் அளிக்காமல் மனுக்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்படும். எனவே பதில்களை விரைவாக அனுப்ப வேண்டும். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தையும் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், உபகரணங்கள், தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.