வாசுதேவநல்லூர் அருகே வடகாசி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரத்தில் அமைந்துள்ள வடகாசி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே தேசியம்பட்டி என்ற நாரணபுரத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி வடகாசி அம்மன் கோவிலில் சித்திரை பூக்குழி திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு அம்மன் எழுந்தருளி வீதி உலாவை தொடர்ந்து காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து விநாயகர் கோவிலை அடைந்தனர். அங்கு புனித நீராடி அக்னி காவடி, தீ சட்டிகளுடன் 5 மணிக்கு கோவில் முன்பு வளர்க்கப்பட்ட அக்னி திடலுக்கு வந்தனர். அங்கு முதலாவதாக காளை மாடு பூக்குழி இறங்கியது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். அதனை தொடர்ந்து வில்லிசை, சாமப் பூஜை, பொங்கல் வழிபாடு, உச்சிகால பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.