திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகிரி:
சிவகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம் உள்பட 21 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. பின்னர் கொடிமரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு வாணவேடிக்கைகள் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து முளைப்பாரி நிகழ்ச்சியும், 41 நாட்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் பிடிமண் எடுத்து வந்து மூலஸ்தானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.. இரவில் அம்மன், அர்ச்சுனர், கிருஷ்ணர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. 5-ந்தேதி அன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் தக்கார் கண்ணதாசன், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) கேசவராசன் மற்றும் காப்பு கட்டும் பக்தர்கள் சங்க நிர்வாகிகள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.