மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனம்,
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மடப்புரம் கோவில்
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் மற்ற தினங்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் தமிழ், ஆங்கில புத்தாண்டு, ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று இரவு பத்திர காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இக்கோவிலில் நடைபெறும் பூஜைகளின் போது மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
சிறப்பு பஸ்கள்
இந்நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் மடப்புரம் கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். முன்னதாக அம்மனுக்கு தங்க கீரிடம் அணிவிக்கப்பட்டிருந்தது. மதியம் 1 மணியளவில் நடைபெற்ற உச்சி கால பூஜையின் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சில பெண்கள் அருள் வந்தபடி சாமியாடினர்.
மேலும், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதல் மாலை வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்யும் வகையில் கோவிலில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் அறங்காவலர்கள் பாஸ்கரன், சண்முகவேலு மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மடப்புரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சாமி தரிசனம்
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக போலீசார் ஷேர் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களை மடப்புரம் விலக்கு பகுதியிலேயே நிறுத்தி அங்கிருந்து பக்தர்களை நடந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.
இதேபோல் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.