பொன்னமராவதி கோர்ட்டு திறப்பு விழா விவகாரம்: ஊழியர்கள் 8 பேர் பணியிடை நீக்கம்?
பொன்னமராவதி கோர்ட்டு திறப்பு விழா விவகாரம் தொடர்பாக ஊழியர்கள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டையில் சமீபத்தில் 3 புதிய கோர்ட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொன்னமராவதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழாவில் நீதிமன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சிலர் மீது பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் சார்பில் சிரஸ்தார் புகார் அளித்தார். அதன்பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் கோர்ட்டு ஊழியர்கள் 8 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இது குறித்து கோர்ட்டு வட்டாரத்தில் கேட்டபோது, 'பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதாக கேள்விப்பட்டோம். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று (அதாவது நேற்று) நார்த்தாமலை கோவில் தேர்த்திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையால் கோர்ட்டு விடுமுறையாகும். அதனால் நாளைதான் (அதாவது இன்று) இதன் முழு விவரம் தெரியவரும்' என்றனர்.