பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரம்


பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பொங்கல் பானை

சிவகங்கை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலுக்கு புகழ் பெற்றது மானாமதுரை. அதற்கு அடுத்தபடியாக சிங்கம்புணரி பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வரும் சீசனுக்கு ஏற்றார்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கோவில் திருவிழா காலங்களில் அக்னி சட்டி, நேர்த்திக்கடன் பானைகள், ஆயிரம் கண் பானைகள், குழந்தை அம்மன் பொம்மைகள், குறிப்பாக அய்யனார் கோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக செய்து வைக்கக்கூடிய மண் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் கோடை காலங்களில் வீடுகளில் தண்ணீர் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வகையில் தண்ணீர் பானைகள் உள்ளிட்ட பொருட்களும், கார்த்திகை மாதங்களில் கார்த்தி சுட்டி விளக்கு, அகல் விளக்கு, திருஷ்டி விளக்கு போன்ற பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.

தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் அதற்காக மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள், பொங்கல் குழம்பு வைப்பதற்கான பானைகள், பொங்கல் வைப்பதற்கான மண் அடுப்புகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். கிராமப்புறங்களில் பழமை மாறாமல் இன்று வரை மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

மும்முரம்

சிங்கம்புணரி பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிங்கம்புணரி வேளார் தெரு மற்றும் வடக்கு வேளார் தெரு பகுதியில் மண் பொருட்களை கொண்டு செய்யப்படும் பானைகள் மற்றும் அனைத்து பொருட்களும் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் லெட்சுமி கூறுகையில், தற்போது பொங்கல் பானைகள், குழம்பு பானைகள், பொங்கல் வைப்பதற்கான அடுப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் இருந்து கரம்பை மண் எடுத்து வரப்பட்டு அதை முறையாக பக்குவப்படுத்தி பின்னர் தண்ணீர் கலந்து பானை தயார் செய்கின்றோம்.

அதன் பின்னர் வெயிலில் நன்றாக காய வைத்து, நெருப்பு மூட்டி சுட வைத்து சாம்பல் சாயம் பூசி தயார் செய்வோம். எங்களுக்கு அரசு கரம்பை மண் எடுப்பதற்கு இலவசமாக அனுமதி கொடுத்தாலும், மண் எடுக்க வாகனங்கள் மூலம் எடுத்து வரும் செலவு மற்றும் அதனை பதப்படுத்தும் செலவும் அதிகமாகி வருகிறது. எங்களுக்கு சீசன் காலங்களில் மட்டுமே இந்த தொழில் தற்போது உள்ளது. சீசன் இல்லாத நேரங்களில் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த தொழிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன என்றார்.

வாழ்வாதாரத்தை காக்க

ஆறுமுகம் என்பவர் கூறுகையில், மழைக்காலங்களில் மண்ணை எடுத்து காய வைப்பதற்கு இடம் இன்றி தொழில் செய்ய முடியாமல் சாலையில் காய வைத்து வருகிறோம். மேலும் மண்ணால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சுட வைப்பதற்காக சூளை வைப்பதற்கும் போதுமான இடமில்லாமல் சிரமப்படுகிறோம். கடந்த மாதம் பெய்த மழையாலும், பனியாலும் தயார் செய்யப்பட்ட பொருட்களை காய வைக்க முடியாமல் சிரமப்பட்டோம். எனவே, எங்களுக்கு மண் பொருட்களை சுட வைப்பதற்கு தேவையான இடத்தை அரசு ஒதுக்கி தர வேண்டும்.

அதேபோல் எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள், விளக்குகள், அகல் விளக்குகளை விற்பனைக்கு வைக்க வேண்டும். மேலும் மண்பாண்ட பொருள் தயாரிக்க மின்சார சுழல் சக்கரத்தை அரசு இலவசமாக வழங்கி நலிந்து வரும் தொழிலை பாதுகாக்க அரசு உதவ வேண்டும் என்றார்.


Next Story