5.72 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 725 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 725 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
குமரி மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நேசமணி நகர்-1 ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் அரவிந்த் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு ஏழை, எளிய பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பட்ட மக்களும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வையோடு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க ஆணையிட்டுள்ளது.
774 ரேஷன் கடைகள்
அதன்படி தமிழகத்தில் உள்ள 2கோடியே 19லட்சத்து 33 ஆயிரத்து 342 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,428 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 591 கூட்டுறவு ரேஷன் கடைகள், 134 அமுதம் ரேஷன் கடைகள், 39 மீனவர் கூட்டுறவு சங்கங்கள், 7 பனைவெல்லம் ரேஷன் கடைகள், 3 மகளிர் ரேஷன் கடைகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் என மொத்தம் 774 ரேஷன்கடைகளில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 725 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு வாழ்த்து
பொதுமக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.