பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x

ரூ.1,000 பரிசுத்தொகையை ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு நிபந்தனைகள் இன்றி அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பரிசுத்தொகை மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

அதன்படி, சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லாத அட்டைதாரர்கள் தவிர்த்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் யாராக இருந்தாலும் அரிசி அட்டைதாரராக இருந்தால் அவர்களுக்கு ரூ.1,000 பரிசு தொகை வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கும் வினியோகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் தொடங்கி வைக்க உள்ளனர்.

இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையை ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story