ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்


ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:30 AM IST (Updated: 10 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,035 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கியது. சர்வர் இணைப்பு கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திண்டுக்கல்

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் 1,035 ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புடன் முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ஆகியவை வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி நகர கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் செயல்படும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு முழு கரும்பு, பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1,000 ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

6,79,183 ரேஷன் கார்டு தாரர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 717 முழு நேர ரேஷன் கடைகள், 287 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்பட மொத்தம் 1,035 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 6 லட்சத்து 79 ஆயிரத்து 183 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, முழு கரும்பு, ரூ.1,000 ஆகியவற்றை வழங்குவதற்காக ரூ.2 கோடியே 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் பரிசு தொகுப்புக்கான பொருட்கள், கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று (அதாவது நேற்று) முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ஆர்.டி.ஓ. பிரபுகுமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சர்வர் இணைப்பு பாதிப்பு

முன்னதாக திண்டுக்கல் கோவிந்தாபுரம், ஆரோக்கிய மாதா தெரு, கோபால்நகர், ஆர்.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் நேற்று 'ஸ்மார்ட் கார்டை' ஸ்கேன் செய்யும் கருவிக்கான சர்வர் இணைப்பு கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக அதிகாலையில் இருந்தே ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். சில மணி நேரம் அவர்கள் காத்திருந்த பின்னரும், சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து ரேஷன் கடை பதிவேட்டில் இடம்பெற்றிருக்கும் ரேஷன் கார்டு தாரர்களின் பெயர் பட்டியலை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ஆகியவற்றை வழங்கினர்.


Next Story