நாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா -சீமான் பங்கேற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பு சார்பில் போரூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
போரூர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பு சார்பில் போரூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கட்சி வளாகத்தில் மண் பானையில் பெண்கள் பொங்கல் வைத்தனர். விழாவில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் கும்மியடித்து குலவை போட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
நாங்கள் அதிகாரத்துக்கு வரும்போது பொங்கல் பண்டிகையை ஒரு வாரத்துக்கு பெரிய விழாவாக கொண்டாடுவோம். அரசு, போக்குவரத்து தொழிலாளர்களிடம் கடன் வாங்கிய கடனாளி. பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் கட்டுகிறீர்கள். ஆனால் அரசு பஸ் ஒழுங்காக உள்ளதா? மழையில் பஸ்கள் ஒழுகுகிறது. இலவச பஸ் பாஸ் எதற்கு?, போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் கோடி இழப்பு அ.தி.மு.க. ஆட்சியில்தான் வந்ததா? ஏன் அதற்கு முன்பு இல்லையா?. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.