தூத்துக்குடியில் காணும் பொங்கல் விழா:கடற்கரை, பூங்காக்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தூத்துக்குடியில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கட்கிழமை கடற்கரை, பூங்காக்கள் மற்றும் முயல் தீவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடியில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முயல்தீவு, துறைமுக கடற்கரை, முத்துநகர் கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முயல்தீவு கடலில் மக்கள் குடும்பத்தினருடன் குவிந்து உற்சாக குளியல் போட்டனர்.
காணும் பொங்கல்
பொங்கல் விழாவுக்கு மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி மக்கள் வீடுகளில் இறைச்சி சமைத்தும், கடற்கரை, மற்றும் ஆற்றங்கரையோரம் சென்று குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து உணவு சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் காணும் பொங்கலை முன்னிட்டு மாநகர பகுதியில் உளள 10 பூங்காக்கள் தூய்மைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த. அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
முயல்தீவு
தூத்துக்குடியில் காணும் பொங்கல் விழாவையொட்டி தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள முயல் தீவுக்கு சென்ற மக்களின் கூட்டம் நேற்று காலையில் குறைவாக காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் முயல் தீவில் மக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. முயல் தீவில் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர். மேலும் இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். முயல்தீவுக்கு வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் குழந்தைகள் கடலில் மீன் பிடித்தும் விளையாடி மகிழ்ந்தனர். முயல்தீவுக்கு மக்கள் அனைவரும் போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
முத்துநகர் கடற்கரை
ரோச்பூங்கா மற்றும் முத்துநகர் கடற்கரை பூங்காவுக்கு காலை முதல் மக்கள் வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பூங்காக்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக தெரிந்தது. பூங்காவின் ஓரத்தில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு மக்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் திரளாக வந்து ஊஞ்சல், சறுக்கு போன்றவைகளில் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த சாப்பாடு, பனங்கிழங்கு, கரும்பு, திண்பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர்.
இதே போன்று தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்காவில் மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் அங்கு உள்ள மரங்களுக்கு கீழே அமர்ந்து இருந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டனர். அங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பூங்காவிற்கு முன்பு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு சிறுவர்-சிறுமியருக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
துறைமுக கடற்கரை
தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் நேற்று காலை முதலே இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினார்கள். இதனால் துறைமுக கடற்கரை மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி துறைமுக கடற்கரையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடைகளில் உள்ள பொருட்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுற்றுலா தளங்கள், பூங்காக்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வது போன்றவற்றை கட்டுப்படுத்த ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்தனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் சீருடை அணியாமல் பொதுமக்களில் ஒருவரோடு, ஒருவராக ஆங்காங்கே ரோந்துப் பணியும் மேற்கொண்டனர். சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுப்பதற்காக பல்வேறு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.