மப்பேடு ஊராட்சியில் சமத்துவபுரத்தில் பொங்கல் விழா - கலெக்டர் பொதுமக்களுடன் கொண்டாட்டம்


மப்பேடு ஊராட்சியில் சமத்துவபுரத்தில் பொங்கல் விழா - கலெக்டர் பொதுமக்களுடன் கொண்டாட்டம்
x

மப்பேடு ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலெக்டர் பங்கேற்று பொதுமக்களுடன் கொண்டாடினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர், அரசு பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்களுடன் பொங்கல் இட்டு பொங்கலோ பொங்கல் என முழங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர், மற்றும் பொதுமக்களின் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கலெக்டர் கண்டுகளித்தார். அதை தொடர்ந்து கலெக்டர் அங்கு நடைபெற்ற உறியடிக்கும் போட்டியில் பங்கேற்று தன் கண்ணில் வெள்ளை துணியை கட்டி உரியில் தொங்க விடப்பட்டிருந்த பானையை லாவகமாக அடித்து உடைத்தார்.

அதை தொடர்ந்து கலெக்டர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர் கேத்ரின் சரண்யா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மலர் விழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்குறியாளர் ராஜவேல், கடம்பத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ், மப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் பாபு என்கின்ற சித்தையா ஜெகதீசன் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story