காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
திருவாரூரில் காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ததால், கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருவாரூரில் காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ததால், கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னிப் பொங்கல்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், 2-ம் நாள் மாட்டுப் பொங்கலும், தை மாதத்தின் 3-து நாள் கன்னிப் பொங்கல் எனும் காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையிலேயே சிறப்பான பண்டிகை இந்த காணும் பொங்கலாகும்.
காணும் பொங்கல் அன்று ஊரின், பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
மேலும் வீடுகளில் சமையல் செய்து உணவு வகைகளை பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு தங்களுக்கு பிடித்தமான இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். அங்கு தங்களது குடும்பத்தினருடன் கூட்டம், கூட்டமாக அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
அதன்படி நேற்று திருவாரூரில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கலையொட்டி திருவாரூர் தியாகராஜ கோவிலுக்கு நேற்று ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
அவர்கள் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். கோவில் பிரகாரம் முழுவதும் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்ததை காண முடிந்தது. இதனால் நேற்று திருவாரூர் தியாகராஜர் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.