குப்பை கிடங்கு போல காட்சி அளிக்கும் குளம்
முத்துப்பேட்டையில் குப்பை கிடங்கு போல குளம் காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
முத்துப்பேட்டையில் குப்பை கிடங்கு போல குளம் காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பட்டறை குளம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே பட்டறைகுளம் உள்ளது. இதன் கரையோரம் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பிரசித்திப்பெற்ற விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இந்த பகுதியில் குளத்தின் கரையோரம் உள்ள சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சாலையோரம் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
குப்பை கிடங்காக...
இந்த சாலை பகுதியில் உள்ள மின் கம்பங்களில் உள்ள விளக்குகளும் ஒளிரவில்லை. இதனால் இரவில் இந்த பகுதியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். அதேபோல் குளத்தின் கரையோரம் பலர் குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருகிறார்கள். இதனால் குளம் குப்பை கிடங்கு போல காட்சி அளிப்பதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த பகுதி திறந்த வெளி கழிவறை போல மாறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
சுத்தம் செய்ய வேண்டும்
எனவே பட்டறைகுளத்தை சுற்றி குப்பைகளை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தம் செய்ய வேண்டும். அங்கு உள்ள தெரு விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.