ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலி; தற்கொலையா? போலீஸ் விசாரணை


ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலி; தற்கொலையா? போலீஸ் விசாரணை
x

ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலியானார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

பாலிடெக்னிக் மாணவர் பலி

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் பாலாறு தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவர், சென்னை ஐகோர்ட்டு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் மோனிஷ் (வயது 17). இவர், திருமுல்லைவாயல் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற மோனிஷ், சென்னை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி ரெயில்வே போலீசார், பலியான மோனிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர், தண்டவாளத்ைத கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

செல்போனை பறித்த ஆசிரியர்

மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது, கடந்த வாரம் மோனிஷ், கல்லூரிக்கு செல்போன் எடுத்து சென்றதாகவும், அதனை வாங்கி வைத்துக்கொண்ட ஆசிரியர், பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதாகவும் தெரிகிறது.

நேற்று காலை மோனிஷ், கல்லூரியில் தேர்வு எழுத இருந்தார். இதற்காக கல்லூரிக்கு வந்த அவர், செல்போனை கேட்டு ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவர், பெற்றோரை அழைத்து வந்தால்தான் செல்போனை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மோனிஷ், தேர்வு கூட எழுதாமல் கல்லூரியில் இருந்து வெளியே சென்று விட்டார்.

தற்கொலையா?

இதுபற்றி மோனிஷின் தந்தைக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தண்டபாணி, திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்றார். அப்போதுதான் தோண்டபாணிக்கு, அவரது மகன் ரெயிலில் அடிபட்டு இறந்துபோன செய்தியை ஆவடி ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். உடனடியாக ஆவடி ரெயில்வே போலீஸ் நிலையம் சென்ற அவர், மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

எனவே செல்போனை ஆசிரியர் பறித்ததால் மோனிஷ், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story