பாலிடெக்னிக் மாணவர் கொன்று புதைப்பு: ஒரே பெண்ணை காதலித்த தகராறில் தீர்த்துக்கட்டிய 3 சிறுவர்கள் கைது
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ஒரே பெண்ணை காதலித்த தகராறில் அவரை கொன்று புதைத்ததாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 20). இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
16 வயது சிறுவனிடம் விசாரணை
இதையடுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேந்திரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.
திடுக்கிடும் தகவல்கள்
அதன்பிறகு அவர் வேறொருவரிடம், ராஜேந்திரன் கொலை தொடர்பாக விசாரிக்கத்தான் என்னை போலீசார் அழைத்து இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு இல்லை என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை மீண்டும் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
ஒரே பெண்ணை காதலித்தனர்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து உள்ளனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை கொலை செய்ய சிறுவன் திட்டமிட்டார். அதன்படி அவர் 16 மற்றும் 14 வயதுடைய நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ராஜேந்திரனிடம் நுங்கு வெட்டி சாப்பிடலாம் என்று கூறி தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேரி பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர். பின்னர் அங்கு பனைமரம் அருகில் கிடந்த குழியில் அவரது உடலை போட்டு புதைத்துவிட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
3 சிறுவர்கள் கைது
இதையடுத்து 16 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ராஜேந்திரனை கொன்று புதைத்த இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் அந்த இடத்தை அடையாளம் காண்பித்தனர்.
அங்கு சாத்தான்குளம் தாசில்தார் முன்னிலையில் ராஜேந்திரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.