கோட்டம் மாறியதால் ஆட்டம் காணும் பொள்ளாச்சி ரெயில் நிலையம்


கோட்டம் மாறியதால் ஆட்டம் காணும் பொள்ளாச்சி ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:45 PM GMT)

கோட்டம் மாறியதால் ஆட்டம் காணும் பொள்ளாச்சி ரெயில் நிலையம்

கோயம்புத்தூர்


நூறு ஆண்டுகள் பழமையானது பொள்ளாச்சி ரெயில் நிலையம். இங்கிருந்து 1915-ம் ஆண்டு ரெயில் சேவை தொடங்கியது. அப்போது பொள்ளாச்சி ரெயில் நிலையம் மதுரை கோட்டத்துடன் இருந்தது. அப்போது இங்கு இருந்த வசதிகளை பார்த்தால் பொள்ளாச்சி ரெயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. சினிமா துறையினரும் இங்கு படையெடுத்து வந்தனர்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை... 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டபோது, மதுரை கோட்டத்துடன் இருந்த பொள்ளாச்சி அங்கிருந்து பிரிக்கப்பட்டு பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. அன்று தெரியவில்லை தன் உரிமை பறிபோகும் என்று. தெரிந்திருந்தால் என்னவோ அன்றே கோட்டத்தை மாற்றிருக்கலாம்.

பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டவுடன் மீட்டர் கேஜ் ரெயில் பாதையை, அகலரெயில் பாதையாக மாற்றும் பணி 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து தற்போது திருச்செந்தூர், நெல்லை, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, பழனி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், பொள்ளாச்சி ரெயில் நிலையம் பொலிவிழந்து காணப்படுகிறது. முந்தைய காலத்தில் இருந்தது போல அங்கு எந்த வசதியும் இல்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகிறது

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

குடிநீர் வசதி

மோகன்ராஜ் (சூளேஸ்வரன்பட்டி):- ரெயில் நிலையத்தில் உள்ள 4 நடைமேடைகளிலும் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குடிநீருக்கு பதிலாக அங்குள்ள போர்வேல் தண்ணீரை குடிக்க பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்த போது அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அந்த பணியின் போது குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாததால் தற்போது குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

விகாஸ் கலாதரன் (பொள்ளாச்சி):- குற்றசம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவுகிறது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி உள்பட முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும்.

தங்கும் விடுதி

மஞ்சுளா (பொள்ளாச்சி):- பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்க தங்கும் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக நடைமேடை பகுதிகளில் தான் இதுபோன்ற தங்கும் விடுதிகள் செயல்படும். ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் ரெயில் வருவதை அங்கிருந்து பார்க்கும் வகையில் இருக்கும். ஆனால் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் நடைமேடை பகுதிக்கு கீழே கட்டப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அங்கு பெரும்பாலும் தங்குவதில்லை. வயதானவர்கள், பெண்களால் அங்கிருந்து ரெயில் வரும் போது படிக்கட்டு ஏறி செல்வது சிரமமானதாக உள்ளது.

டிஜிட்டல் நேர அட்டவணை

சுசீலா (பொள்ளாச்சி):- ரெயில் நிலையங்களுக்கு வரும் ரெயில்கள் குறித்த விவரம் நேர அட்டவணையுடன் பயணிகளுக்கு தெரியும் வகையில் டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் நேர அட்டவணை இல்லாததால் பயணிகள் எந்த நேரத்திற்கு ரெயில் வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் முன்பதிவு செய்யப்பட்ட ரெயில்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோச் எந்த பகுதியில் வருகிறது என்பதும் தெரிவதில்லை. ஒவ்வொரு ரெயில்களுக்கும் மாறுபடுகிறது. இதனால் வயதானவர்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர். சிலர் தேடி பிடித்து கடைசி நேரத்தில் ஓடி சென்று ரெயிலை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மூடி கிடக்கும் கழிப்பிடம்

மதன் (ஆனைமலை):- பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ரெயில் வந்து, செல்லும் நேரங்களில் மட்டும் கழிப்பிடத்தை திறந்து வைக்கின்றனர். மற்ற நேரங்களில் கழிப்பிடம் மூடிக் கிடக்கிறது. இதனால் ரெயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியவில்லை. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அமாவாசை நாட்களில் மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் ரெயிலுக்கு நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே கழிப்பிடத்தை காலை முதல் இரவு வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(பாக்ஸ்) பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்த வசதிகள் என்ன?

மதுரை கோட்ட கட்டுப்பாட்டில் இருந்தபோது பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிமனை இருந்தது. இங்கு 19 பெட்டிகள் கொண்ட 5 ரெயில்களை ஒரே நேரத்தில் நிறுத்தி கொள்ளும் அளவிற்கு வசதிகள் இருந்தது. ரெயில்களுக்கு தண்ணீர் நிரப்பும் வசதியும் பொள்ளாச்சியில் இருந்தது. ஆனால் தற்போது அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது.

மேலும் ரெயில்கள் பழுதாகி பாதியில் நின்றால், பயணிகள் செல்வதற்கு வசதியாக சிறப்பு ரெயிலும் பொள்ளாச்சியில் நிறுத்தப்பட்டு இருக்கும். 40 டன் எடை தூக்கும் திறன் கொண்ட கஜராஜா கிரேன் பொள்ளாச்சியில் தான் இருந்தது. மதுரைக்கு அடுத்தப்படியாக கூடுதல் மருத்துவ அலுவலர் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார். இதுபோன்ற பல்வேறு முக்கியத்துவத்தை பொள்ளாச்சி ரெயில் நிலையம் பெற்று இருந்தது. ஆனால் பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்ட பிறகு பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது. தற்போது ரெயில் பராமரிப்பு பணிமனை பாலக்காடு நகரத்திற்கு சென்று விட்டது. பொள்ளாச்சியில் இருந்த சீனியர் பிரிவு முதுநிலை பொறியாளர் அலுவலகம் கேரளா மாநிலம் கொல்லங்கோட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது பொள்ளாச்சியில் ரெயில் நிலையம் மட்டும் உள்ளது.

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் ரெயிலை இயக்குவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதன்பிறகும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க முன்வரவில்லை. எனவே பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை பாலக்காட்டு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைப்பதே நிரந்தர தீர்வு என்று ரெயில்வே ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Next Story