பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது


பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 26 Oct 2023 1:00 AM IST (Updated: 26 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்று திரும்பிய பயணிகளால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

கோயம்புத்தூர்

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு திரும்பி வந்தனர். இதன் காரணமாக கோவை, திருப்பூர் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறினர். இதனால் பெண்கள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டனர்.மேலும் பஸ்கள் உடனுக்குடன் கிடைக்காததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர்.


இதுகுறித்து பயணிகள் கூறுகையில், வழக்கமாக பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பண்டிகை முடிந்து திரும்பி வருவதற்கு சிறப்பு பஸ்கள் குறைவாக இயக்கப்படுகின்றன. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் கடும் சிரமப்படுகின்றன. எனவே கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.


அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், கடந்த 20-ந்தேதி முதல் வெளியூர்களுக்கு செல்ல பொள்ளாச்சியில் இருந்தும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று பயணிகள் திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் கூட்ட நெரிசலை பொறுத்து அந்தந்த வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றனர்.



Next Story