115-வது பிறந்தநாளையொட்டி அண்ணா உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை


115-வது பிறந்தநாளையொட்டி அண்ணா உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
x

அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அண்ணாவின் சிலைக்கும், உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அந்தவகையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தலைவர்கள் மரியாதை

இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், மாபா.பாண்டியராஜன், கோகுல இந்திரா, வளர்மதி, இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இருந்தார்.

பின்னர், அண்ணாவின் உருவப்படத்திற்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மலர்மாலை அணிவித்தார். அவருடன் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் திருவுருவ சிலைக்கும், பின்னர் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அ.ம.மு.க. சார்பில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில்...

இதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, தி.மு.க. சார்பில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அவரைத்தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ்.பெரியார், மகளிர் அணி சி.வெற்றி செல்வி, க.பெரியார் செல்வி ஆகியோரும் வந்திருந்தனர்.

டெல்லி

டெல்லியிலும் அண்ணா பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு எம்.பி. தம்பிதுரை மாலை அணிவித்தார். இதில் சந்திரசேகர் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல டெல்லியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story