அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்


அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
x

அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

திருவாரூர்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்துக்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் படிவம் 6பி பெற்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்துடன் செய்ய வேண்டும். வாக்காளர் அடையாள எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று செயலி மூலமாக கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இ-சேவை மையங்கள்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம் முகாம்களில் படிவம் 6பி வழங்கி ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்திட வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்காளர் ஆதார் எண்ணை அரசு, இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் சேவை மையங்கள் மூலமாகவும் இணைக்க முடியும்.

அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 35 ஆயிரத்து 660 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், இணைப்பு திட்டமானது வருகிற மார்ச் 2023-க்குள் 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு அரசியல் கட்சியினர், அரசு சாரா அமைப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் கீர்த்தனாமணி (மன்னார்குடி), தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் சங்கர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story