போலீஸ்காரரின் மர்ம சாவு வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க உத்தரவு
போலீஸ்காரரின் மர்ம சாவு வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 51). சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் மாயமானார். கணவர் மாயமானது குறித்து அவரது மனைவி மாலா போலீஸ் துணை கமிஷனர் லாவண்யாவை சந்தித்து புகார் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் ஜெயராமன் காரிப்பட்டி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை மீட்ட காரிப்பட்டி போலீசார் அடையாளம் தெரியவில்லை என கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்தனர். பின்னர் 2 வாரம் கழித்து அவரது உடலை அடக்கம் செய்தது தெரியவந்தது.
இதற்கிடையில் சம்பவத்தன்று ஜெயராமனுடன் மது அருந்திய அவரது நண்பர் விஜயகுமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் ஜெயராமன் அதிகளவு மது அருந்தியதால் அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தார். ஜெயராமனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் சிறிய காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீஸ்காரர் மர்ம சாவு வழக்கை வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர், போலீஸ்காரர் ஜெயராமன் குடிபோதையில் கீழே தவறி விழுந்து அடிப்பட்டு இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.