கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது


கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
x

கோப்புப்படம் 

நீலகிரியில் போலீஸ்காரரே கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி,

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு ஏற்றார் போல் கஞ்சா விற்பனை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 29). இவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். 14-வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர் தற்போது நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி போலீசார் ஊட்டி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த சவுந்தரராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் நீலகிரிக்கு பணிக்கு வந்த கடந்த 4 மாதங்களாக தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். நீலகிரியில் போலீஸ்காரரே கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story