போலீசாருக்கு இனி சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு
போலீசாருக்கு இனி சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த நிலையில், விவாதத்துக்கு பதில் அளித்து நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் பின்னர் 3 துறைகள் தொடர்பான 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-
புதிய உபகரணங்கள் வாங்குதல்
* 332 நடுத்தர காவல் நிலையங்களுக்கு, ஒரு காவல் நிலையத்துக்கு 3 என்ற எண்ணிக்கையில் 996 பல்வகை கையடக்க கருவிகள் ரூ.4 கோடியே 38 லட்சத்து 24 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள பாதுகாப்பு பிரிவுக்கு வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் புதிய கருவிகள் ரூ.2 கோடியே 74 லட்சத்து 13 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* சென்னை மாநகரில் 2 ஆயிரம் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் நிறுவப்படும்.
* ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் சென்னை மாநகர காவல் துறைக்காக நவீன உபகரணங்கள் ரூ.2 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* 3 வழித்தடங்களில் 300 தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்கள் நிறுவவும், மோட்டார் வாகன விதிமீறல்களுக்காக வழக்குகளை பதிவு செய்ய 30 புதிய போக்குவரத்து சமிக்ஞைகளில் தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்கள் ரூ.19 கோடியே 27 லட்சத்து 20 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள ஐ.பி.எஸ். அல்லாத காவல் துணை கண்காணிப்பாளர் (தரம்-1) முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 976 அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி செலவில் மடிக்கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
* நுண்ணறிவு பிரிவில் உள்ள காவல் ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகளுக்கு 247 மடிக்கணினிகள் ரூ.1 கோடியே 1 லட்சம் செலவில் வாங்கப்படும்.
* இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் உள்ள 1930 அழைப்பு மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை ரூ.9 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரம் செலவில் விரிவாக்கம் செய்யப்படும். முதல்கட்டமாக இந்த ஆண்டுக்கு ரூ.3 கோடியே 10 லட்சம் வழங்கப்படும்.
* ஒவ்வொரு காவல் பயிற்சி பள்ளிக்கும் குறைந்தது 10 கணினிகள், அதற்கு தேவையான பாகங்கள், அறைகலன்கள் மற்றும் ஒரு தொகுப்பு புலன் விசாரணை கருவி ஆகியவை ரூ.80 லட்சத்து 10 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் அனைத்து காவல் நிலையங்களிலும், இதர அலுவலக கட்டிடங்களிலும் 270 தீயணைப்பு கருவிகள் ரூ.49 லட்சத்து 95 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டு நிறுவப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவில் புலனாய்வு அதிகாரிகளுக்காக 40 மடிக்கணினிகள் ரூ.24 லட்சம் செலவில் வாங்கப்படும்.
* சென்னை பெருநகர காவலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 57 போக்குவரத்து சமிக்ஞைகள் ரூ.4 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மாற்றப்படும்.
* குற்றவாளிகளை கைது செய்ய 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகள் ரூ.75 லட்சத்து 7 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் துணை ஆணையாளர் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மின்சார ஜெனரேட்டர் ரூ.68 லட்சத்து 28 ஆயிரம் செலவில் பொருத்தப்படும்.
* கிரிப்டோ கரன்சி மோசடியைக் கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரீயாக்டர் கருவி ரூ.1 கோடியில் வாங்கப்படும்.
* குற்ற வழக்குகளை களநிலையில் புலனாய்வு செய்ய காவல் அதிகாரிகளுக்கு 450 பேப்லெட்டுகள் ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* அதி உயர் அலை மற்றும் டிஜிட்டல் நடமாடும் வானொலி சாதனங்கள் துணை பொருட்களுடன் ரூ.7 கோடியே 36 லட்சம் செலவில் வாங்கப்படும்.
காவலர் பொதுமக்கள் நல்லுறவு
* காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக, முதல்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா ரூ.4 லட்சம் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை ரூ.10 கோடி செலவில் கட்டப்படும்.
* சென்னை பெருநகரில் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரூ.25 லட்சம் செலவில் நடத்தப்படும்.
* சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 3 துறை சார்ந்த வல்லுநர்கள் ஒரு வருட காலத்துக்கு ஈடுபடுத்துவதற்கென ரூ.36 லட்சம் வழங்கப்படும்.
* முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக 38 காவல் துறை கட்டிடங்களுக்கு மின்தூக்கி வசதிகள் ரூ.8 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
புதிய முயற்சிகள்
* மாநில குற்ற ஆவண காப்பகத்தில் மென்பொருள் வல்லுநர்களின் துணையுடன் மென்பொருள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் ரூ.60 லட்சத்து 89 ஆயிரம் செலவில் அமைக்கப்படும்.
* பெருநகர சென்னை காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவில் சமூக ஊடகப்பிரிவு ஒன்று ரூ.2 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரம் செலவில் உருவாக்கப்படும்.
* பெருநகர சென்னை காவல் துறையில் செயற்கை நுண்ணறிவு உரையாடல் திட்டத்தை சாட்போட், வாய்ஸ்போட், வீடியோ சாட் உள்ளிட்ட செயலிகள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படுத்தப்படும்.
* காவல் நிலையங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் ஆகியோருக்கு சிறப்பான குற்றப்புலனாய்வு, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத்தருதல் ஆகியவற்றிற்கு சுழற்கேடயம் வழங்கப்படும்.
காவலர் நலன்
* காவலர்களுக்கு சீருடை மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்து வழங்குவதற்கு பதிலாக ரூ.45 கோடி செலவில் இப்பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4,500 சீருடைப்படி வழங்கப்படும்.
* காவலர் முதல் தலைமை காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரையிலான காவல் பணியாளர்களுக்கு எரிபொருள் படி ரூ.370-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 வீதம் உணவுப்படி வழங்கப்படும்.
* 5-வது காவல் ஆணைய பரிந்துரையின்படி அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை ஒரு வார காலத்துக்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்படும்.
* அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும்.
* உயர் பதவிகளில் உள்ள காவல் துறை அதிகாரிகள் வழங்கும் பண வெகுமதி தொகை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
* பெருநகர சென்னை காவல் துறையின் ஆயுதப்படை பிரிவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உணவுப்படி ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.
* காவலர் அங்காடி வசதியை ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும்.
* காவலர் மருத்துவமனை வசதி ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும்.
* போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு ரூ.50 லட்சம் சுழல் நிதி வழங்கப்படும்.
* சென்னையில் ஆலந்தூர் மற்றும் கொண்டித்தோப்பில் உள்ள காவல் குடியிருப்புகளில் உடற்பயிற்சிக்கூடம், நூலகம் மற்றும் கல்வி மைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி ஏற்படுத்தப்படும்.
மோப்ப நாய்கள்
* மோப்ப நாய்கள், மோப்ப நாய்களை கையாள்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு, பராமரித்தல் மற்றும் தடுப்பூசிக்கான படி உயர்த்தப்படும்.
* குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிறை வைப்பதற்காக தயாரிக்கப்படும் புத்தகங்களுக்கான செலவுத்தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தடய அறிவியல் துறை
* திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதியதாக மரபணு ஆய்வு பிரிவு ரூ.10 கோடியே 15 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
* கோவை மற்றும் ராமநாதபுரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் போதை மருந்து ஆய்வு பிரிவுகள் அமைக்கப்படும்.
* தடய அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்படும்.
* குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பின் சிறப்பான செயல்பாட்டுக்காக இ-தடய தளத்தில் வழக்கு விவரங்கள் மற்றும் அறிவியல் ஆய்வறிக்கைகளை பதிவேற்றம் செய்வதற்குரிய கட்டமைப்பு தடய அறிவியல் ஆய்வகங்களில் உருவாக்கப்படும்.
* தடய அறிவியல் நிபுணர்கள் காணொளி கூட்டரங்கு வாயிலாக நீதிமன்றங்களில் சாட்சியம் அளிப்பதற்குரிய உட்கட்டமைப்பை தலைமை மற்றும் வட்டாரத் தடய அறிவியல் ஆய்வகங்களில் உருவாக்கப்படும்.
* விழுப்புரம், ராமநாதபுரம், சேலம் மற்றும் திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வகங்கள் ஐ.எஸ்.ஓ., ஐ.இ.சி. 17025:2017 சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
* குற்ற வழக்குகளில் பெறப்படும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் துப்பாக்கியல் ஆய்வுகளை மேற்கொள்ள துப்பாக்கி குண்டின் வேகத்தை அளவிடும் அதிநவீன கருவி வாங்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.