தர்மபுரியில்விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கைபோலீசார் எச்சரிக்கை
தர்மபுரியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் உத்தரவிட்டார். அதன்பேரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி, ரகுநாதன் மற்றும் போலீசார் தர்மபுரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆட்டோ டிரைவர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்து வர வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், ப்ளூடூத் காதில் அணிந்து கொண்டும் ஆட்டோவை இயக்க கூடாது. தர்மபுரி பஸ் நிலையம் முன்பு மற்றும் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் பயணிகளை ஏற்றக்கூடாது. டிரைவிங் லைசன்ஸ், ஆட்டோ பர்மிட், இன்சூரன்ஸ் மற்றும் புகைச்சான்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஆட்டோக்களில் ஆடியோ பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீசார் விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.