கூடுவாஞ்சேரியில் இருந்து கோவைக்கு சென்ற சிவலிங்க ரதத்தை தடுத்து நிறுத்திய போலீசார்; அனுமதி பெறாததால் நடவடிக்கை
கூடுவாஞ்சேரியில் இருந்து கோவைக்கு சென்ற சிவலிங்க ரதத்தை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை மாவட்டம் ஈஷா மையத்திற்க்கு 50 பேர் கொண்ட தென்கைலா பக்தி பேரவையை சேர்ந்தவர்கள் நடை பயணமாக நேற்று காலை சிவன் சிலை கொண்ட ரதம், நாயன்மார்கள் கொண்ட ரதம் என 2 ரதங்களை தோளில் சுமந்தபடி ஒரு உற்சவர் சிலை என புறப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வழியாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் அந்த ரதங்களை தடுத்து நிறுத்தி போலீசாரிடம் உரிய அனுமதி இல்லாமல் செங்கல்பட்டை கடந்து செல்ல முடியாது என்று கூறி 2 ரதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை 20 கிலோ மீட்டர் தூரம் போலீசாரின் அனுமதியின்றி எப்படி இந்த ரதம் செங்கல்பட்டு வந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர். அனுமதி பெற்றிருந்தால் கோவை மாவட்டம் ஈஷா வரை செல்லலாம். இல்லை என்றால் செங்கல்பட்டில் இருந்து மீண்டும் திருப்பி கூடுவாஞ்சேரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.