சுங்குவார்சத்திரம் அருகே 1,300 கிலோ குட்கா சிக்கியது
சுங்குவார்சத்திரம் அருகே 1,300 கிலோ குட்கா போலீசார் வாகன சோதனையில் சிக்கியது.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றார். போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக டிரைவர் மகேஷ்குமாரிடம் விசாரித்தபோது அந்த வாகனம் குன்றத்தூரை சேர்ந்த பால்ராஜ் என்பவருடையது என்பதும் பால்ராஜ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் குட்கா பொருட்கள் வாங்கி வர சொன்னதும் தெரிய வந்தது. இந்த நிலையில் டிரைவர் மகேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து 218 மூட்டையில் இருந்த 1,300 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவர் மகேஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வாகன உரிமையாளரான குன்றத்தூரை சேர்ந்த பால்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.