போலீஸ் போல நடித்து காதல் ஜோடியிடம் நூதன கொள்ளை: பலூன் வியாபாரி கைது


போலீஸ் போல நடித்து காதல் ஜோடியிடம் நூதன கொள்ளை: பலூன் வியாபாரி கைது
x

மெரினாவில் போலீஸ் என்று ஏமாற்றி காதல் ஜோடியிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த பலூன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் நொச்சிகுப்பத்தைச்சேர்ந்தவர் அசர்அலி (வயது 30). பலூன் வியாபாரியான இவர், பகலில் மெரினாவில் பலூன் வியாபாரம் செய்து வந்தார். இரவில் வீடு புகுந்து திருட்டு ெதாழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது அடையாறு மற்றும் வியாசர்பாடி போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சமீப காலமாக அசர்அலி திருட்டு தொழிலுக்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு, மெரினாவில் காற்று வாங்க வரும் காதல் ஜோடிகளிடம் போலீஸ் என்று ஏமாற்றி நூதன முறையில் பணத்தை பறித்து வந்தார்.

ஒரு காதல் ஜோடியை மிரட்டி 'ஜிபே' மூலம் தனது வங்கி கணக்கிற்கு ரூ.12 ஆயிரம் போடச்சொல்லி ஏமாற்றினார். அதில் பணத்தை இழந்த காதலனை அவரது செல்போனில் பேசி, மீண்டும் 'ஜிபே' மூலம் ரூ.10 ஆயிரம் போடச்சொல்லி இருக்கிறார். இல்லா விட்டால் வழக்கு போட்டு விடுவேன் என்றும் மிரட்டினார்.

கைது

அந்த காதலன் இது குறித்து, மெரினா போலீசில் புகார் கொடுத்தார். மெரினா போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட காதலன் இந்த முறை 'ஜிபே' மூலம் பணம் போட மாட்டேன் என்றும், நேரில் வந்து பணத்தை கொடுப்பதாகவும் அசர்அலியிடம் தெரிவித்தார். பணத்துடன் மெரினாவுக்கு வரும்படி அசர்அலி கூறினார். அவ்வாறு நேரில் வந்து பணம் தருவதாக சொன்ன காதலன், போலீசாரையும் உடன் அழைத்து வந்தார்.

அப்போது அசர்அலி மெரினாவில் பலூன் விற்று கொண்டிருந்தார். அவரது போலீஸ் வேடம் கலைந்தது. அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story