கோவையில் பிரதமரின் வாகன பேரணிக்கு சிறு மாற்றங்களுடன் காவல்துறை அனுமதி


கோவையில் பிரதமரின் வாகன பேரணிக்கு சிறு மாற்றங்களுடன் காவல்துறை அனுமதி
x
தினத்தந்தி 16 March 2024 3:05 AM GMT (Updated: 16 March 2024 5:34 AM GMT)

பேரணி தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை,

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒருபகுதியாக வருகின்ற 18ம் தேதி பிரதமர் கோவை வருகிறார். இந்த பயணத்தின் போது 3.5 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி "வாகன பேரணி" செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமரின் சாலைப் பயணம் தொடர்பாக மாநகர காவல்துறையிடம் பாஜகவினர் அனுமதி கோரினர்.

அப்போது பிரதமரின் "வாகன பேரணி" நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சார்பில், கோவை பா.ஜ.க மாவட்ட தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பிரதமரின் "வாகன பேரணி" கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கனவே கோவையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், கோவையில் இதுவரை எந்த ஒரு ரோடு ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரதமரின் "வாகன பேரணி" நிகழ்ச்சிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி அளிப்பதில் என்ன பிரச்னை என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதேவேளையில், பேரணி செல்லும் வழி, தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை காவல்துறை முடிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், பேரணி நடைபெறும் பகுதியில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு கோவை மாநகர காவல்துறை சிறு மாற்றங்களுடன் அனுமதி அளித்துள்ளது. பேரணி தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கண்ணப்பன் நகர் பிரிவில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பாஜகவினர் அனுமதி கோரிய நிலையில், மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமனையில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு இடையூறு இல்லாத வகையில் பேரணியின் தூரம் குறைக்கப்பட்டு உள்ளது.


Next Story