செல்போன் திருட்டை தடுக்க போலீசார் ரோந்து
ஊட்டியில் செல்போன் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி
ஊட்டியில் செல்போன் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்போன் திருட்டு அதிகரிப்பு
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போன் என்றால் பேசுவதற்கு என்பதெல்லாம் எப்போதோ மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனை, சமூக வலைதளங்கள், கேமிங், இணையதள பயன்பாடு என செல்போனின் பயன்பாடு நீண்டு கொண்டே செல்கிறது. இதேபோல் மற்றொருபுறம் செல்போன் மற்றும் ஸ்மார்ட் போன்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்போன்கள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் பாதிக்கப்படும் சுற்றுலா பயணிகள் புகார் கொடுக்க தயங்குவதுடன், சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
தனிப்படை போலீசார்
நீலகிரியில் கடந்த 2021-ம் ஆண்டு செல்போன் திருட்டு சம்பந்தமாக 350 புகார்கள், கடந்த ஆண்டு 750 புகார்கள், இந்த ஆண்டு இதுவரை 300 புகார்கள் பதிவாகி உள்ளது. இந்தநிலையில் செல்போன் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பணியில் ஈடுபடுகின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் இருப்பதால், செல்போன் திருட்டு மட்டுமல்ல ாமல் மது பிரியர்களின் தொல்லை, பஸ் நிலையத்திற்குள் தனியார் வாகனங்களை கொண்டு வருவது உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.