'போலீஸ் லத்தி பூ போட்டு பூஜை பண்ணவா இருக்கு' - அண்ணாமலை ஆவேசம்
காவல் துறையின் கையை கட்டிப்போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரை,
தமிழக பாஜக தலவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சமீபகாலமாக இளைஞர்கள் பெண்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வது அதிகமாகி உள்ளது. மதுரையில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது :-
மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். நானும் என்னுடைய கருத்தை கூறியிருந்தேன். எதற்காக குற்றங்கள் அதிகரிக்கின்றன என்றால் போதை பொருள்கள் பழக்கம். போதை பொருள் பழக்கம் என்பது கல்லூரி மாணவர்கள், குழந்தைகளிடம் அதிகமாக உள்ளது.
போதை பொருள் எடுத்து கொண்ட உடன் திடீரென தைரியம் வருகிறது, பயம் போய்விடுகிறது. யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தைரியம் வருகிறது. பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் மது பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். இது எல்லாம் கடந்த ஒரு வருடமாக உள்ளது.
கட்டுகோப்பாக உள்ள தமிழகத்தில் மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் மேல் தமிழகத்தில் காவல் துறையின் கையை கட்டிபோட்டு உள்ளார்கள். முன்பெல்லாம போலீசார் லத்தியை வைத்து இரண்டு அடி அடிப்பார்கள். நான் கல்லூரி படிக்கும் போது போலீசார் அப்படி தான் இருந்தனர். அப்படி இருக்கும் போது தான் போலீசார் மீது பயம் இருந்தது.
மது மற்றும் போதை பொருள் கலாசாரத்தை ஒழித்தால் இளைஞர்கள் சமுதாயத்தோடு ஒன்றி வருவார்கள். அவ்வாறு ஒழிக்க வில்லை எனில் இளைஞர்கள் வேறு சமுதாயம் வேறு என்ற நிலை வந்து விடும். காவல் துறைக்கு சில அதிகாரங்கள் கொடுக்க வேண்டும்.
போலீசார் லத்தியை பூ போட்டு பூஜை செய்யவா? வைத்துள்ளார்கள். லத்திக்கு ஒரு மகத்துவம் இருக்கு. காவல் துறை சீரழிந்தது என்றால் சமுதாயம் சீரழியும். எனவே சில இடங்களில் போலீசார் கடுமையாக இருக்க வேண்டும், எங்கு லத்தியை பயன்படுத்த வேண்டுமோ அங்கு அதை பயன்படுத்த வேண்டும்.
காவல் துறையை கட்டிபோட்டால் ரவுடிகள், பெண்கள் மீது குற்றம் செய்வோர், மது, போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கட்டுப்படுத்த முடியாது. காவல் துறையின் கையை கட்டிப்போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.