ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆய்வு
நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை மற்றும் தரம் ஆகியவை சரியாக உள்ளதா என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை மற்றும் தரம் ஆகியவை சரியாக உள்ளதா என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
புகார்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக அனுப்பப்படுகிறது. அங்கிருந்து அனுப்பப்படும் பொருட்கள் எடை குறைவாக அனுப்பப்படுவதாக அரசுக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா, மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருப்புவனத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் சோதனை செய்தனர்.
ஆய்வு
ஆய்வின்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகள் சரியான அளவில் உள்ளதா? அங்குள்ள பொருட்கள் தரமாக உள்ளதா? என்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து பொட்டபாளையம், முக்குடி, காஞ்சிரங்குளம், செங்குளம், ஜாரி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக லாரி ஒன்று பொருட்கள் ஏற்றியபடி தயாராக இருந்தது. இதைத் தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த லாரியில் இருந்த மூடைகளை சோதனை செய்தனர். அப்போது பொருட்களின் அளவு சரியாக உள்ளதா? என்றும், தரமாக உள்ளதா? என்றும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்படும் அத்தியவசிய பொருட்கள் எடை சரியாகவும், தரமாகவும் உள்ளதா? என்பதை அறிய தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.