கூலிப்படையை ஏவிய போலீஸ் ஏட்டு: மதுரையில், நகைக்கடை அதிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது - தப்பி ஓடியபோது தவறி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதி


கூலிப்படையை ஏவிய போலீஸ் ஏட்டு: மதுரையில், நகைக்கடை அதிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது - தப்பி ஓடியபோது தவறி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதி
x

மதுரையில் நகைக்கடை அதிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் இருந்து தப்பிய போது தவறி விழுந்து காயம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை


மதுரையில் நகைக்கடை அதிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் இருந்து தப்பிய போது தவறி விழுந்து காயம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

நகைக்கடை அதிபர் கொலை

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இந்து மக்கள் கட்சி நிர்வாகியான இவர் ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்திவந்தார். கடந்த 31-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற போது ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அய்யப்பன் (26), கார்த்திக் (26), அழகுபாண்டி (26) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ஏட்டுவுக்கு தொடர்பு

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்து வந்த ஹரிஹரபாபுவின் 2-வது மனைவிக்கும், நகைக்கடை அதிபர் மணிகண்டனுக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. .

இதுதவிர மணிகண்டன் நகைக்கடையில், அந்த ஏட்டு சீட்டுக்கு பணம் செலுத்தி இருந்தாராம். அதற்குரிய தொகையான ரூ.6 லட்சத்தை கொடுக்காமல் மணிகண்டன் இழுத்தடித்து வந்ததாகவும், இதன்காரணமாக ஏற்பட்ட விரோதத்தில், மணிகண்டனை கூலிப்படையை ஏவி ஏட்டு ஹரிஹரபாபு தீர்த்துக்கட்டிய அதிர்ச்சி தகவல் அம்பலமானது. எனவே அவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் 2 பேர் கைது

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் தினேஷ் (27) கூலிப்படை தலைவனாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவரையும் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 2 பேரையும் பிடிக்க ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த 2 பேரும், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் 2 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதன் மூலம் மணிகண்டன் கொலையில் ஏட்டு, கூலிப்படை தலைவன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தவர்களை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டினார்.


Next Story