நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் திடீர் ஆய்வு


நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் திடீர் ஆய்வு
x

திண்டுக்கல், வேடசந்தூரில் செயல்படுகிற நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் திடீர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், பழனி சாலையில் நுகர்பொருள் வாணிப கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதேபோல் வேடசந்தூரிலும் நுகர்பொருள் வாணிப கிடங்கு செயல்படுகிறது. இந்த கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் ரேஷன் பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, ரேஷன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறதா? என்று சோதனை செய்யும்படி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, போலீஸ் ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று திண்டுக்கல், வேடசந்தூரில் செயல்படும் நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் முறையாக பாதுகாத்து வைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். பின்னர் ரேஷன் பொருட்கள் இருப்பு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டனர். அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் ரேஷன் பொருட்களின் விவரம், கிடங்குகளில் மீதமுள்ள பொருட்களின் விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை முறையாக அனுப்ப வேண்டும். பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து ரேஷன் பொருட்களை வரவழைத்து இருப்பு வைக்க வேண்டும் என்று நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.


Next Story