கடைக்காரர்களை மிரட்டுவதாக பெண் மீது போலீசில் புகார்


கடைக்காரர்களை மிரட்டுவதாக பெண் மீது போலீசில் புகார்
x

கடைக்காரர்களை மிரட்டுவதாக பெண் மீது வியாபாரிகள் சங்கத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 32). பாசிமணி விற்கும் இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்தபோது அவமதிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரடியாக சென்று அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்தநிலையில் வியாபாரிகள் சங்கத்தினர் 25-க்கும் மேற்பட்டோர் வணிகர் சங்கத்தலைவர் ராஜசேகர் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று கூட்டமாக சென்று அஸ்வினி மீது புகார் செய்தனர்.

மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் டிபன் கடை நடத்தி வரும் சுலோச்சனா அளித்த புகாரில், அஸ்வினி ரூ.10-க்கு சப்பாத்தி, பரோட்டா கேட்டு மிரட்டுகிறார். கொடுக்க முடியாது என்று கூறியதால் தனது கணவரை கத்தியை காட்டி மிரட்டி தகாத வார்த்தைகளில் திட்டுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதே போன்று தங்களுடன் தகராறில் ஈடுபட்டதாக அதே தெருவில் உள்ள பேக்கரி கடை நடத்தி வருபவரும் மாமல்லபுரம் பஸ்நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருபவரும் என பலர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனிடம் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


Next Story