உடன்குடியில் போலீசார் வாகன சோதனை: காரில் கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி திமிங்கல உமிழ்நீர் சிக்கியது


தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் போலீசார் வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி திமிங்கல உமிழ்நீர் சிக்கியது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் திமிங்கலத்தின் உமிழ்நீரை சிலர் விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் உத்தரவின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் உடன்குடி வில்லி குடியிருப்பு சந்திப்பு பகுதியில் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக ஒரு கார் வந்தது. போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

திமிங்கலம் உமிழ்நீர்

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. காரில் வந்த 3 பேரும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருேக உள்ள இருக்கன்துறை பகுதியைச் சேர்ந்த ததேயூஸ் பெனிஸ்றோ (வயது 44), கூடங்குளம் அருகே பெருமணலை சேர்ந்த அருள் ஆல்வின் (40), செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவா்கள் வைத்து இருந்த பையை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினமான திமிங்கலத்தின் உமிழ்நீர் (ஆம்பர்கிரிஸ்) 11 கிலோ இருந்தது. அதை அவர்கள் காரில் கடத்தி, விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

ரூ.11 கோடி

திமிங்கலம் உமிழ்நீர், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் எங்கிருந்து திமிங்கலத்தின் உமிழ்நீர் கடத்தி வந்தனர். யாரிடம் விற்பனை செய்ய கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பின்னர் உமிழ்நீர் திருச்செந்தூர் வனத்துறை அதிகாரி கனிமொழி அரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் ரூ.11 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

உடன்குடியில் ரூ.11 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story