கொசவப்பட்டி ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி
திண்டுக்கல் அருகே ெகாசவப்பட்டி ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி நடத்தினர். காளைகள் முட்டியதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
திண்டுக்கல்லை அடுத்த கொசவப்பட்டியில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் விசாகன், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் விஜயன், பயிற்சி உதவி கலெக்டர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஆர்.டி.ஓ. பிரேம்குமார், திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தானமேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் திண்டுக்கல், நத்தம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. அவற்றை கால்நடை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்கள் 211 பேர் ேபாட்டியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உறுதி ெமாழி ஏற்று கொண்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 25 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் இறங்கினர்.
பரிசுப்பொருட்கள்
வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் வேகமாக ஓடின. ஒரு சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று மல்லுகட்டின. அந்த காளைகளை வீரர்கள் விடாமல் மடக்கி பிடித்தனர். அப்போது பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
போட்டியில் சிறப்பாக காளைகளை பிடித்த வீரர்களுக்கும், நின்று விளையாடி வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளுக்கும் விழா குழு சார்பாக தங்கம், வெள்ளி நாணயங்கள், எல்.இ.டி. டிவி, எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில் என பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
30 பேர் காயம்
காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு கொசவப்பட்டி வட்டார மருத்துவர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் சாணார்பட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 17), மதுரையை சேர்ந்த சூர்யா (20), பொன்மாந்துறையை சேர்ந்த அமித் (19), பஞ்சம்பட்டியை சேர்ந்த ஜோசப் (21), அலங்காநல்லூரை சேர்ந்த கவுதம் (30), நத்தத்தை சேர்ந்த இந்தியன் (21) உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
போலீஸ் தடியடி
ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணிக்கு முடிவடையும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 300 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் 464 காளைகள் போட்டியில் அனுமதிக்கப்பட்டன. போட்டியில் காளைகளின் உரிமையாளர்கள் விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்கவில்லை. இதனால் மதியம் 2 மணி அளவில் பாதியிலேயே போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அப்போது போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளை கொண்டு வந்த உரிமையாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விட வேண்டும் என கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கினர். இதனால் போட்டி முடிவடையும் தருவாயில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியினை கொசவப்பட்டி ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். போட்டியை காண திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானவர்கள் வந்து இருந்தனர்.