சென்னையில் ஒரே நாளில் தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் போலீசாரால் கைது; 115 பேர் நீதிமன்றத்தில் சரண்
போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் சென்னையில் தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் கைது செய்யப்பட்டனர். 115 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
55 பேர் கைது
சென்னையில் குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்த பின்னர், முறையாக ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் சென்னையில் 12 துணை கமிஷனர் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடுவதை அறிந்து 115 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் 41 பேரின் ஜாமீனை ரத்து செய்யும்படி கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 7 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
குண்டர் சட்டம்
இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று சென்னை போலீஸ்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.