மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் தீவிரம்
409 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி இரவு சரக்கு வேனை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். இதில் ஆந்திராவில் இருந்து காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட 409 கிலோ கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சிப்பிக்குளம் கீழ வைப்பாறு ஸ்ரீ வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 32), தூத்துக்குடி சிப்பிக்குளம் குளத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸ்டார்வின் (38) ஆகியோர் என தெரியவந்தது. தப்பியோடிய 2 பேரையும் பிடிக்க புதுக்கோட்டை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஸ்டார்வினை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "தப்பிய 2 பேரை தீவிரமாக தேடிய நிலையில், ரமேஷ் வேறொருவரின் செல்போனை வாங்கி அதில் வாட்ஸ்-அப் காலில் தனது நண்பரிடம் பேசினார். இந்த தகவல் கிடைத்ததும் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அவர் கடலூரில் கடற்கரை பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அங்கு சென்று ரமேசை கைது செய்தோம். ஸ்டார்வின் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறிவிட்டார். கஞ்சாவுடன் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வேனின் வாகன பதிவெண் தவறுதலாக உள்ளது. அது திருட்டு வண்டியாக இருக்கலாம். ஸ்டார்வினை பிடித்தால் தான் அந்த 409 கிலோ கஞ்சா யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது தெரியவரும். அதனால் அவரை தீவிரமாக தேடி வருகிறோம்'' என்றனர்.