கரூரில் அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டை தடுத்து நிறுத்தம் - போலீசார் அதிரடி நடவடிக்கை


கரூரில் அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டை தடுத்து நிறுத்தம் - போலீசார் அதிரடி நடவடிக்கை
x
கோப்புப்படம்

கரூர் மாவட்டம் பூலாம்வலசில் அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்டம் பூலாம்வலசில் அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டையை தடுத்து நிறுத்திய போலீசார், அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமமானது உலகப் புகழ்பெற்ற சேவல் சண்டைக்கு பிரசித்தி பெற்றது இந்த பகுதியில் ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு நாட்களாக தொடர்ந்து சேவல் சண்டை போட்டிகள் நடைபெறும். குறிப்பாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கும். மேலும், மூன்று, நான்கு நாட்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டு சேவல் கால்களில் கத்தி கட்டப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறும் என்று நபர் ஒருவர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சேவல் சண்டை போட்டி இந்த ஆண்டு நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால் இந்த பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த பகுதிக்கு வரக்கூடிய வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் உள்ளூர் மக்களின் வாகனங்களை பெயர், விலாசம், மற்றும் பதிவெண்களை குறித்துக் கொண்டு உள்ளே அனுப்புகின்றனர்.


Next Story