கம்பம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கம்பம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கம்பம் நகராட்சி சின்னவாய்க்கால் ரோடு பகுதியில், சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் இருபுறமும் 86 குடியிருப்பு மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு புகார்கள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில், கடந்த 15-ந்தேதி கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெயிட்டார். அதில், அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்படும் செலவினங்களை அவர்களே ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. தெற்கு நகர செயலாளர் செந்தில்குமார், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று சென்றனர், அங்கு ஆணையாளரை சந்திக்க முயன்றனர். அப்போது அவர்களிடம் பேசிய நகரமைப்பு அலுவலர் சலீம், அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தம்மணம்பட்டியில் வீடு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்காக தவணை முறையிலும் பணம் செலுத்தலாம் என்றார். அதற்கு அப்பகுதி மக்கள் எங்களுக்கு உள்ளூரிலேயே மாற்று இடம் கொடுங்கள், நாங்களே வீடு கட்டி கொள்கிறோம் என்றனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.