கம்பம்-சுருளிப்பட்டி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
கம்பம்-சுருளிப்பட்டி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பிறகு வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களான ஊசி, பஞ்சு, கையுறைகள், காலாவதியான மருந்துகள் ஆகியவை மருத்துவக்கழிவு எனப்படுகிறது. இந்த கழிவுகளை குப்பைகளில் போட்டால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்படும். இதனால் ஒப்பந்த நிறுவனங்கள் மருத்துவமனைகளில் உள்ள கழிவுகளை பெற்றுக்கொண்டு ட்ரீட்மென்ட் பிளாண்ட்களில் உயர் வெப்ப நிலையில் எரித்தல் மற்றும் ஆழமாக புதைத்து அழிக்கின்றனர்.
இதற்கு அதிக செலவாகும் என்பதால் சில தனியார் மருத்துவமனைகள் இந்த விதிகளை பின்பற்றாமல் தங்கள் மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசி, ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்சு, மருந்து பாட்டில்களை இரவு நேரங்களில் நெடுஞ்சாலையோரங்களில் கொட்டிவிடுகின்றனர். அதன்படி கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் தெரு பகுதியில் சாலையோரம் மருத்துவ கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவக்கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.