பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா
கம்பம் நடும் விழா
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா நேற்று நடந்தது.
கம்பம் நடும் விழா
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடும் விழா நடந்தது. முன்னதாக இரவு 8.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில், மஞ்சள் பூசி, காப்பு கட்டி, பூஜை செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 3 கம்பங்களை கோவில்களின் பூசாரிகள், மேளதாளங்கள் முழங்க தோளில் ஊர்வலமாக சுமந்து வந்தனர்.
நேர்த்திக்கடன்
ஊர்வலம் பெரியார் வீதி, கச்சேரி வீதி, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் முதல் கம்பம் பெரியமாரியம்மன் கோவிலிலும், 2-வது கம்பம் சின்ன மாரியம்மன் கோவிலிலும், 3-வது கம்பம் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் நடப்பட்டது. இந்த விழாவில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
வருகிற ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அதைத்தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். 5-ந்தேதி காலை 9.30 மணிக்கு தேர்வடம் பிடித்தலும், வருகிற 8-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ந்தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.