விஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் தற்போதுவரை 40 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும்; இன்னும் பலபேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இந்தக் கோர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது. இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கள்ளச்சாராயம் அருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்ற இந்த மூன்றாண்டுகளில் நடைபெறுகின்ற இரண்டாவது மிகப் பெரிய கள்ளச்சாராய மரண சம்பவம் இது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், அரசு எந்திரமும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் எந்த அளவிற்கு சட்டவிரோத கள்ளச்சாராய கும்பலுக்கு துணை போயிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய திமுக அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்; இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தியும்;
இனியும் இதுபோன்றதொரு சம்பவம் தமிழ் நாட்டில் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக சார்பில் 24.6.2024 (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்டு கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக சார்பில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழகச் செயலாளர்கள். கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுக சார்பில், திமுக அரசைக் கண்டித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.